சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி
- பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர்.
- 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல் நிகழ்ச்சியும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு வாகன பவனியும், மதியம் 1 மணிக்கு உச்சிப்படிப்பும், சிறப்பு பணிவிடையும், அன்னதானமும் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து முத்திரி கினற்றங்கரையில் 5 முறை சுற்றியபடி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார்.
நள்ளிரவு 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வடக்கு வாசலில் தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து 5-ந்தேதி அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு, மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.