முன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை
- பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள்.
- பித்ருக்களை நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.
அச்சோதை என்னும் தேவலோகப் பெண், நதிக்கரை ஓரத்தில் ஆயிரம் வருடம் தவம் செய்தாள். அவள் மரீசி மகரிஷியின் மகன்களான பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள். பித்ரு தேவதைகள் அவளுக்கு காட்சி கொடுத்து `உனக்கு என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்டனர்.
அப்பொழுது அந்த தேவ மங்கை, பித்ரு தேவதைகள் இடையே இருந்த மாவசு என்பவரைப் பார்த்து `இவர் என்ன கம்பீர வடிவம் கொண்டவராக இருக்கிறார். இதுபோன்று ஒரு கணவன் தனக்கு அமையக்கூடாதா?' என ஒரு கணம் சிந்தித்தாள். அவளது எண்ணத்தைத் தெரிந்து கொண்ட மாவசு, `நீ தேவலோக மங்கை. ஆனால் சாதாரணமான மனிதப் பிறவிபோல் நடந்து கொண்டாய். எனவே நீ பூலோகத்திற்குச் சென்று பெண்ணாய் பிறப்பாய்' என்று சாபம் கொடுத்தார்.
தன் தவறை எண்ணி வருந்திய அந்த தேவலோகப் பெண், `இந்த சாபத்தில் இருந்து எனக்கு விமோசனம் இல்லையா?' எனக் கேட்க, `நீ தொடர்ந்து தவம் செய். அந்தரிட்சத்தில் (ஆகாயமும் இல்லாமல் பூமியில் இல்லாமல் இடையில் அமைந்த பகுதி) நீ செய்யும் தவத்தால் உன்னுடைய சாபம் விலகும்' என்று கூறினார், மாவசு.
இதையடுத்து மீண்டும் சில வருடங்கள், அந்த தேவலோகப் பெண் தவம் செய்தார். அதன்பின்னர் அவளுக்கு மீண்டும் பித்ரு தேவர்கள் காட்சி கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்து, `உன் பாவங்களும், சாபங்களும் விலகியது. இதன் பயனாக நீ துவாபர யுகத்தில் மச்சகந்தி என்னும் பெயரோடு, ஒரு மீனின் வயிற்றில் பிறப்பாய். பராசுரர் என்னும் மகா முனிவரால் நீ, வியாசர் என்ற சிறப்புமிக்க மகனை பெற்றெடுப்பாய்.
பின்னர் சந்தனு என்ற மகாராஜாவின் மகாராணியாக மாறி, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுப்பாய். உன் கடைசி காலத்தில் நீ புண்ணிய நதியாக உருவெடுப்பாய். அச்சோதை என்ற உன் பெயரிலேயே அந்த நதியை அனைவரும் அழைப்பார்கள். உனக்கு நாங்கள் காட்சி கொடுத்த இந்த அமாவாசை தினத்தில் பித்ரு தேவதைகளையும் (இறந்த முன்னோர்கள்), பித்ருக்களையும் நினைத்து வழிபட பெரும்பேறு கிடைக்கும்.
அமாவாசை திதியில் `நம் வம்சத்தில் பிறந்த யாராவது எள்ளும், தண்ணியும் கொடுப்பார்களா?' என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நாளில் யார் எள்ளும், தண்ணியும் கொடுக்கிறார்களோ, அவர்களது முன்னோர்களுக்கு மோட்சத்தை கொடுப்போம். அப்படி பித்ரு தர்ப்பணம் செய்பவர்களின் வம்சமும் தழைக்கும். அதோடு பித்ரு தோஷமும் விலகும்' என்று வரம் அளித்தனர்.