வழிபாடு

ஆடி கிருத்திகையையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-08-09 04:36 GMT   |   Update On 2023-08-09 04:36 GMT
  • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமி நாதசாமி கோவில் உள்ளது.

இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

தந்தையாகிய சிவபெருமானுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் 'குரு உபதேச தலம்' என்ற சிறப்பும் பெற்றுள்ளது.

மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், முருகனுக்கு மஞ்சள், பால், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் தஞ்சை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, மாலை 7 மணிக்கு நேத்திர புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி ஆகியோர் ஆலோசனைப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News