தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்செந்தூர் கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்
- கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
- இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள்.
இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் அதிகாலையே குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதேபோல் தூத்துக்குடி யில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலிலும், தை அமாவாசையையொட்டி இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். இக்கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் வரை திருவிழா நடக்கிறது. 9-ந் திருவிழா வரை காலை, மாலை சுவாமி பல்வேறு திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று தை அமாவாசை திருவிழாவையொட்டி பிற்பகல் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இலாமிட்ச வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனியும், 10 மணிக்கு 1-ம் கால கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தரும் நடக்கிறது.
11-ம் திருவிழாவான நாளை அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், 1 மணிக்கு 2-ம் கால பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல், சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சியும், கற்பூர தீப தரிசனமும் நடைபெறுகிறது.