திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம்- பக்தர்கள் தரிசனம்
- வருஷாபிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
- இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம் இன்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் தேவசேனா அம்பாள் தனித்தனி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருஷா பிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.