- ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய்த் தோன்றினார்.
- அடியையோ அல்லது முடியையோ காண்கின்றவர் யாரோ அவரே பெரியவர்.
நான்முகனுக்கும் திருமாலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. நம்மில் யார் பெரியவர்? என்பதுதான் இந்த போட்டி. இந்த போட்டியை எப்படி நடத்துவது? எப்பொருளை வைத்து நடத்துவது? என்பதில் அவர்களுக்கு இடையே குழப்பம். இதை அறிந்த சிவபெருமான் அவர்களிடையே, ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய்த் தோன்றினார். தமது அடியையோ அல்லது முடியையோ காண்கின்றவர் யாரோ அவரே பெரியவர் எனக்கூறி ஓங்கி உயர்ந்து நின்றார்.
திருமால், வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் திருவடிகளைக் காண புறப்பட்டார். திருமால் திருவடிகளைக் காண புறப்பட்டதால், நான்முகன், அன்னமாய் வடிவெடுத்து இறைவனின் திருமுடி யைக்காண பறந்து சென்றார். பாதாளம் ஏழினைக் கடந்து சென்றும் இறைவனின் திருவடியை திருமாலால் காண முடியவில்லை. இதுபோல் இறைவனின் திருமுடியைக்காண உயர உயரப்பறந்தும் நான்முகனால் திருமுடியைக் காண முடியவில்லை.
இதனால் சிவபெருமானின் அடியையும், முடியையும் காண இயலாது போட்டியில் தோல்வி அடைந்தார். தங்களது அகங்காரம் அழியப்பெற்றவர்களாய், `சிவப்பரம் பொருள், உலகில் முழு முதற்பரம் பொருள்' என்பதை உணர்ந்து தங்களது பிழைகளை பொறுத்தருளுமாறு வேண்டிக் கொண்டு சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். அப்போது சிவபெருமான் சிவலிங்கத் திருஉருவத்தோடு ஜோதியில் இருந்து வெளிப்பட்டு அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமாயிற்று. அதனின்று தோன்றிய சிவலிங்கம் அருணாசலேஸ்வரர் ஆனார். லிங்கமே மலையாகவும். மலையே லிங்கமாகவும் வழிபடலானது. திருவண்ணாமலை கிருதாகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும் கலியுகத்தில் கல்மலையாகவும் மாறின.