கோபத்தை கட்டுப்படுத்துபவனே உண்மையான வீரன்- (நபி)
- உறவுகள்-நட்பில் விரிசலுக்கு கோபமே காரணமாக அமைகிறது.
- ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்.
எப்போதும் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்ததாக இந்த உலக வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே மனிதர்கள் பலரின் விருப்பமாக உள்ளது. நினைத்தது நடக்க வேண்டும், விரும்பியது கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப் பாதையாக இருக்கின்றது. அதேபோல இன்றைய மனிதன் தனது வெற்றிக்காக, மகிழ்ச்சிக்காக அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எளிதில் கோபம் கொள்கிறான். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது கூட உணராமல் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றான்.
கோபம் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் விரிவாக எடுத்துக்கூறி மனிதர்களுக்கு நல்வழி காட்டுகின்றது. இன்றைய காலகட்டத்தில் குடும்பங்களில் பிரிவு, உறவுகள்-நட்பில் விரிசல் போன்றவற்றுக்கு கோபமே காரணமாக அமைந்து விடுகின்றது. எனவே தான் கோபம் கொள்ளுதலை தவிர்க்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வற்புறுத்துகின்றன. அவற்றை காண்போம்:
`இறை நம்பிக்கையாளர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்' (திருக்குர்ஆன் 42:37)
`பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக்கொள்வார்கள்; மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்'. (திருக்குர்ஆன் 3:134)
கோபம் குறித்து நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய இந்த தகவல்கள் புகாரி நூலில் இடம்பெற்றுள்ளது. அவை:
`மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்'.
`ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு' என்று அறிவுரை கூறினார்கள். அவர் 'அறிவுரை கூறுங்கள்' எனப் பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு' என்றே சொன்னார்கள்'.
கோபம் ஏற்படும் போது நாம் என்ன செய்யவேண்டும்
`சுலைமான் இப்னு ஸுரத் (ரலி), நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், 'நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா?' என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்' என்றார். (நூல்: ஸஹீஹ் புகாரி)
கோபத்தினால் 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்காதீர்கள் என்று நபிகளார் கூறியுள்ளார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகின்றார்: "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக, அல்லாஹ்வின் அடியார்களே! அன்பு பாராட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று". (நூல்: ஸஹீஹ் புகாரி)
கோபத்தில் இருந்து வெளியேறுங்கள்
இறைத்தூதர் (ஸல்) "ஒருவர் தம் சகோதரரிடம் மனஸ்தாபம் கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். இவ்வாறு செய்யலாகாது. ஸலாமை முதலில் தொடங்குகிறவர் தாம் இவர்கள் இருவரில் சிறந்தவர் ஆவார்". அறிவிப்பாளர்: அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி).
கோபம் ஏற்படும் போது செய்ய வேண்டியது:
உங்களில் ஒருவருக்கு நிற்கும் போது கோபம் வந்தால் அமர்ந்து கொள்ளட்டும். அப்போதும் போகவில்லையானால் அவர் படுத்துக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: ஸுனன் அபூதாவூத்)
"நிச்சயமாக கோபம் ஷைத்தானின் குணம். ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டான். நீரைக் கொண்டுதான் நெருப்பை அணைக்க முடியும். எனவே உங்களில் ஒருவர் கோபப்பட்டால் ஒளு (உறுப்புக்களை நீரால் கழுவி சுத்தம்) செய்து கொள்ளட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அதிய்யா (ரலி) நூல்: ஸுனன் அபூதாவூத்).
இறைவனின் நல்லடியார்களே, கோபத்தை கைவிடுவோம், சாந்தியையும், சமாதானத்தையும் பரப்புவோம்.