வழிபாடு

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் திருவிழா: தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Published On 2023-07-26 03:21 GMT   |   Update On 2023-07-26 03:21 GMT
  • அக்னி அபிஷேகம் நடைபெற்றது.
  • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏக தின அன்னை தமிழ் அர்ச்சனை, கிராம சாந்தி, முனியப்பன் பகாசுரன் வழிபாடு, கொடியேற்றம், பொங்கல் வைத்தல், 36 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட குண்டம் திறத்தல், பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

திருவிழாவுக்கு சிகரம் வைத்தாற் போல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க சுவாமி ஊர்வலம் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட சுவாமி ஊர்வலம் அதிகாலை 5 மணிக்கு பீமன் பகாசூரன் சந்நிதி அருகே குண்டம் இறங்கும் இடத்தை வந்தடைந்தது.

குண்டம் இறங்குவதற்காக நேற்று காலை முதலே கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். குண்டம் இறங்குவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி ரகுபதி கையில் வேலெடுத்து குண்டத்தை வலம் வந்து பூஜை செய்து. மல்லிகை மலர்ச்செண்டு, எலுமிச்சை கனியை குண்டத்தில் வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

தொடர்ந்து உதவி பூசாரிகள் மணிகண்டன் கோலமுடி, சேகர் சக்தி கரகம், ரமேஷ் சிவன் கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினார்கள். பின்னர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கினர். காலை 6 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நிறைவடைந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதியம் 12 மணிக்கு அக்னி அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தமிழ் புலவர் மு.சவுந்தரராஜன் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாணிக்கவேல் துரைசாமி, தேக்கம்பட்டி ஊராட்சி தலைவி நித்யா நந்தகுமார் மற்றும் துரை நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் குழுவினர் குண்டம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் குண்டம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உட்பட 3 துணை சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 550-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News