திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்
- சுவேதாரண்யேஸ்வரர்- பிரம்ம வித்யாம்பிகையுடன் தேரில் எழுந்தருளினார்.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்திப்பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் நவக்கிரகங்களில் புதனுக்குரிய தலமாகும். இங்கு சிவன் அகோரமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
சிவனின் கண்களில் இருந்து 3 பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்கினி பெயர்களில் 3 தீர்த்தக்குளங்கள் இங்கு அமைந்துள்ளன. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் கடந்த 4-ந் தேதி இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சுவேதாரண்யேஸ்வரர்- பிரம்ம வித்யாம்பிகையுடன் தேரில் எழுந்தருளினார். காலை 9.30 மணி அளவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் முத்துராமன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் துரைராஜன், ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மங்கை மடம் சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சரவணன், விவசாய சங்க தலைவர் வடக்குத்தோப்பு துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் திருவெண்காடு ஆகும். நேற்று தேரோட்டத்தை ஒட்டி அவருடைய வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன், துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.