வழிபாடு

விழாக்கோலம் பூண்ட திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரா் கோவில்

Published On 2023-04-30 07:49 GMT   |   Update On 2023-04-30 07:49 GMT
  • திருக்கடையூர் கோவிலில் காலசம்ஹார விழா இன்று நடக்கிறது.
  • நூற்றுக்கால் மண்டபத்தில் வீர நடன தரிசனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. ஆயுள்ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகளுக்காக இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலசம்ஹார விழா இன்று நடக்கிறது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலசம்ஹார திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலசம்ஹார திருவிழாவானது கோவில் வளாகத்தில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடக்கிறது.

6-ம் நாள் நிகழ்ச்சியாக சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து தருமபுர ஆதீனம் முன்னிலையில் காலனை வதம் செய்யும் நிகழ்சியான காலசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் காலையில் வீர நடன தரிசனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கால சம்ஹார திருவிழாவை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டு உள்ளது.

Tags:    

Similar News