வழிபாடு

அம்பாளுக்கும், சுவாமிக்கும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

ராமேசுவரம் கோவிலில் அம்பாள், சுவாமி திருக்கல்யாணம் இன்று நடக்கிறது

Published On 2023-07-24 06:04 GMT   |   Update On 2023-07-24 06:04 GMT
  • அம்பாளுக்கும், சுவாமிக்கும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
  • 29-ந்தேதி சுவாமி-அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் எழுந்தருளும் நடக்கிறது.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 11-வது நாளான நேற்று ராமதீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக நேற்று காலை 6 மணி அளவில் கோவிலில் இருந்து வெள்ளி கமல வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு மேல் சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் கோவிலில் இருந்து தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். பகல் 2 மணிக்கு மேல் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது சுவாமியை அம்பாள் சுற்றி 3 முறை வலம் வரவே அம்பாள் கழுத்தில் இருந்த மாலை சுவாமி கழுத்திலும், சுவாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மாலை அம்பாள் கழுத்திலும் 3 முறை அணிவிக்கப்பட்டு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை மாற்றுதல் நிகழ்ச்சியை கோவிலின் குருக்கள் உதயகுமார், சிவமணி, ஸ்ரீராம் உள்ளிட்டோர் செய்தனர். நிகழ்ச்சியில் கோவிலின் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், ஆய்வாளர் பிரபாகர், மேலாளர் மாரியப்பன், செயல் அலுவலர் விஜயலட்சுமி, பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, முன்னாள் அறங்காவலர் சண்முகம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் ஆஞ்சநேயர் சன்னதியில் வைத்து நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) அதிகாலை தபசு மண்டகப்படியில் இருந்து அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைகின்றார். தொடர்ந்து இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 29-ந் தேதி சுவாமி-அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவுபெறுகின்றது.

Tags:    

Similar News