வழிபாடு

நவக்கிரக தோஷம் நீக்கும் திருமங்கலக்குடி

Published On 2024-01-10 04:55 GMT   |   Update On 2024-01-10 04:55 GMT
  • நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்.
  • தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.

நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாகவும் திருமங்கலக்குடி விளங்குகிறது. நவக்கிரக நாயகர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கி தங்களது சாபம் நீங்கப் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. காலவ முனிவர் என்பவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்.

முனிவரின் தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து முனிவரை தொழு நோய்தாக்காதிருக்க வரமும் அளித்தனர்.

நவகிரகங்களின் இந்த செயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார். நவகிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே அவர்கள் தர வேண்டும் என பணித்திருந்தும் காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரகங்களுக்கு தொழுநோய் ஏற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டார்.

பின்னர் நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டில் (இவ்விடம் தற்போது சூரியனார்கோவில் என்று அழைக்கப்படுகிறது) கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தத்தில் நீராடி, பின்னர் திங்களன்று காவிரியில் நீராடி பிராண நாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.

நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டமையால், நவக்கிரக கோவில்களுக்கு தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி!

Tags:    

Similar News