திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா
- 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய அடியார்கள் நால்வரும் பல வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதையடுத்து வருகிற 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகன சகோபுர வீதியுலாவும், 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.