வழிபாடு

சந்திர கிரகண நேரத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2022-11-09 05:17 GMT   |   Update On 2022-11-09 05:17 GMT
  • இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொணடு சாமி தரிசனம் செய்தனர்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான ேகாவில்களின் நடை சாத்தப்பட்டது. மதியம் 2.39 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம் மாலை 6.19 மணி வரை நடந்தது. கிரகணம் தொடங்குவதற்கு முன்பே புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பல்வேறு கோவில்களின் நடை சாத்தப்பட்டு இருந்தது. சந்திரகிரகணம் முடிந்த பின்னர் மாலை 7 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன.

இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நடை சந்திர கிரகண நேரத்திலும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன.

சந்திர கிரகணத்திலும் இக்கோவில் நடை திறந்து இருப்பதற்கு இக்கோவில் மூலவராக தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிப்பதே காரணமாகும். தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக தர்பாரண்யேஸ்வரர் உருவானதால் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். இதனால் சந்திரகிரகணத்திலும் வழக்கமான பூஜைகள் நடந்தன.

இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சந்திரகிரகணம் முடிந்த, பின்னர் கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்த குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. மூலவர் தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரருக்கு கிரகண கால அபிஷேகமும் நடந்தன.

Tags:    

Similar News