திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ராமநவமி உற்சவம் தொடங்கியது
- ராமநவமி விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
- தினந்தோறும் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சாற்று முறை நடைபெறுகிறது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் ராம நவமியை முன்னிட்டு 9 நாள் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான ராமநவமி உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி ராமர், சீதா பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு காலையில் திருமஞ்சனம் மற்றும் மாலை சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சாற்று முறை நடைபெறுகிறது. முக்கிய விழாவான ராமநவமி விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு காலையில் சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மதியம் சேவை காலம், மாலை சாற்றுமுறை நடைபெற்று சாமி வீதிஉலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.