வழிபாடு

திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா

Published On 2024-01-30 03:30 GMT   |   Update On 2024-01-30 03:30 GMT
  • சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.
  • ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா.

திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் (1767 – 1848) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். இவர் `தியாக பிரம்மம்' என்று போற்றப்படுபவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர், ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி, இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர், அரசவைக்கு செல்ல மறுத்து ''நிதிசால சுகமா'' என்ற கல்யாணி ராகக் கிருதியைப் பாடினார். ராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப்படவில்லை.

"ஏல நீ தயராது" கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப்படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்ய நாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாக தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் இசைவாணர்களால் இன்றளவும் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா திருவையாறில் எதிர்வரும் 2024 ஜனவரி 26 தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நிறைவுநாள். ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாள். இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி, தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்துவர்.

Tags:    

Similar News