வழிபாடு

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் திருவூரல் மகோற்சவம்: புட்லூருக்கு உற்சவர் புறப்பாடு

Published On 2023-04-07 09:40 GMT   |   Update On 2023-04-07 09:40 GMT
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  • இரவு புட்லூர் கிராமத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது.

திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் உற்சவர் வீரராகவர் பெருமாள் புட்லூர் கிராமத்திற்கு விஜயம் செய்வது வழக்கம். இது திருவூரல் மகோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவூரல் மகோற்சவம் இன்று நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர் வீரராகவர் பெருமாள், கோவிலில் இருந்து அதி காலை 5 மணிக்கு புட்லூர் கிராமத்திற்கு புறப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அங்கு இன்று மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு புட்லூர் கிராமத்தில்சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது. பின்னர் நாளை அதிகாலை 2 மணிக்கு புட்லூரில் இருந்து வீரராகவ பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.

Similar News