வழிபாடு

திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நடந்த காட்சி.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மறுவூடல் திருவிழா நடந்தது

Published On 2023-01-17 08:25 GMT   |   Update On 2023-01-17 08:25 GMT
  • இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை உள்ளது.
  • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை உள்ளது. பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார்.

ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கினார்.

இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இந்த ஊடல் மற் றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.

மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், பழங்கள் மற்றும் பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணியளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார்.

அங்கிருந்து இன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் புறப்பாடு நடந்தது. கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நிகழ்ச்சி நடக்கும். அப்போது சாமி அம்மன் இணைந்து கோவிலுக்குள் செல்வார்கள். இதனுடன் திருவூடல் திருவிழா நிறைவு பெறுகிறது.

விடுமுறை தினம் என்பதால் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News