வழிபாடு

31.10.2024 தீபாவளி பண்டிகை: லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்

Published On 2024-10-30 06:31 GMT   |   Update On 2024-10-30 06:31 GMT
  • குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும்.
  • தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் செல்வம் செழித்தோங்க குபேர பூஜை செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். பணம் உள்ளிட்ட செல்வம் செழிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமின்றி, வீட்டில் தீமைகள் விலகி நன்மைகள் பெருகி மகிழ்ச்சி பெருக வேண்டும் என்பதற்காக இந்த பூஜை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. பொதுவாக குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும். குபேரரை தனியாக மட்டுமின்றி லட்சுமியுடன் சேர்த்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானது ஆகும்.


குபேர பூஜையை பொதுவாக அமாவாசை திதி இருக்கும் நேரத்தில் தான் செய்ய வேண்டும். தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி மாலை 4.29 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது.

அமாவாசை திதியானது நவம்பர் 1-ந்தேதி மாலை 6.25 மணி வரை உள்ளது. நவம்பர் 1-ந்தேதி கவுரி விரதமும் வருகிறது. தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.

தீபாவளி நாளில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு அசைவம் சாப்பிடுபவர்கள் அடுத்த நாள் குபேர பூஜை செய்வது நல்லது. ஏனென்றால் அடுத்த நாள் மாலை வரை அமாவாசை திதி இருப்பதால் அன்றைய தினம் செய்யலாம். ஆனாலும், தீபாவளி நாளிலே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது ஆகும்.

குங்குமம், மகாலட்சுமி படம், குபேரர் படம், 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் ஒரே மாதிரியான 9 அல்லது 108 நாணயங்கள், மலர்கள் (தாமரை இருந்தால் சிறப்பு), துளசி, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, அட்சதை ஆகியவை பூஜைக்கு தேவையான பொருட்கள் ஆகும்.


குபேரருக்கு உரிய வட திசையில் சிறிய மனை வைக்க வேண்டும். அதில் குபேரர் சிலை வைக்க வேண்டும். குபேரர் படம் அல்லது சிலையை வடக்கு நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.

மனைப்பலகையின் ஒரு ஓரத்தில் குபேர யந்திரம் வரையப்பட்டிருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து இருக்க வேண்டும்.

பின்னர் குல தெய்வத்தை வழிபட்டு விட்டு குபேர மற்றும் லட்சுமியை வணங்கி மகாலட்சுமியின் 108 போற்றிகளையும் கூறி குங்குமம், மலர்கள் அல்லது அட்சதை தூவி அர்ச்சனை செய்ய வேண்டும்.

லட்சுமி குபேர பூஜையின் பிரசாதத்தை மட்டும் நாம் சாப்பிட வேண்டும். மறுநாள் பூஜையில் பயன்படுத்திய நாணயங்களை எடுத்து ஒரு துணியில் கட்டி உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பீரோ ஆகிய இடத்தில் வைக்க வேண்டும்.

Tags:    

Similar News