வழிபாடு

திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்ததையும், திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜர் கோவிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்

Published On 2023-06-06 06:17 GMT   |   Update On 2023-06-06 06:17 GMT
  • சாமி வெள்ளிப் பல்லக்கில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
  • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோக தியாகராஜசாமி கோவில் உள்ளது. இங்கு திருஞானசம்பந்தருக்கு தனிச்சன்னதி உள்ளது. திருஞானசம்பந்தருக்கு இளம் வயதில் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவிலில் அன்னை உமையவள் நேரில் தோன்றி திருமுலைப்பால் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. அதனைத் தொடர்ந்து நல்லூர் பெருமணம் என்று அழைக்கப்படும் ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தருக்கும், தோத்திர பூரணாம்பிகைக்கும் பெரியோர்களின் ஆசியின்படி திருமணம் நடைபெற்றதாகவும், அப்போது தம்பதியர்கள் இருவரும் தீயில் புகுந்து முக்தி அடைந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது. அதே நேரத்தில் திருமணம் காண வந்த அனைவரும் தீயில் கலந்து முக்கி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

திருஞானசம்பந்தசுவாமிகள் மனைவி மற்றும் திருமணம் காண வந்தவர்களுடன் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் தீயில் கலந்து முக்தி அடைந்ததாக ஐதீகம். அதன்படி வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தையொட்டி சிவலோக தியாகராஜர் கோவிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் முக்தி அடையும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு வீதி உலா, இரு வீட்டார் சீர்வரிசை எடுத்து வருதல், மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

சாமி வெள்ளிப் பல்லக்கில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை மூல நட்சத்திரத்தில் பேரின்ப பேரளிக்கும் திருப்பதிகம் ஓதுதல் நிகழ்ச்சியும், மணமக்களுடன் திருமணம் காண வந்தவர்கள் அனைவரும் தீயில் கலந்து முக்தி அடைந்த நிகழ்ச்சியான சிவஜோதி தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான, ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜசாமி தேவஸ்தானம் சார்பில் காறுபாரு சொக்கநாத தம்பிரான் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News