வழிபாடு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தெப்போற்சவம் 31-ந் தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது

Published On 2023-05-17 07:27 GMT   |   Update On 2023-05-17 07:27 GMT
  • தெப்போற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
  • 4-ந் தேதி கருட வாகன சேவை நடக்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி வரை 5 தெப்போற்சவம் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மசரோவரத்தில் தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். தெப்போற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எல்லா துக்கங்களும் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முதல் நாளான 31-ந் தேதி ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணசுவாமி, இரண்டாம் நாள் சுந்தரராஜசுவாமி, கடைசி மூன்று நாட்கள் பத்மாவதி தாயார் ஆகியோர் தெப்பத்தில் உலா வருவார்கள். இதனை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக நீரடா மண்டபத்தில் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. வருகிற 3-ந் தேதி இரவு 8 மணிக்கு தாயாருக்கு கஜவாகன சேவையும், 4-ந் தேதி இரவு 8 மணிக்கு கருட வாகன சேவையும் நடக்கிறது. தெப்போற்சவம் முடிந்து தினமும் கோவில் வீதிகளில் தாயார் ஊர்வலம் நடைபெறும்.

தெப்போற்சவத்தையொட்டி 5 நாட்களுக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டது.

Tags:    

Similar News