வழிபாடு

நாரைக்கு முக்தி அளித்த திருநாரையூர் சவுந்தரேசுவரர்!

Published On 2024-09-13 02:50 GMT   |   Update On 2024-09-13 02:50 GMT
  • சைவத்திற்கு ஆதாரம் பன்னிரு திருமுறைகள்.
  • பன்னிரு திருமுறைகளை உலகறிய செய்தவர் நம்பியாண்டார் நம்பி.

சைவத்திற்கு ஆதாரம் பன்னிரு திருமுறைகள். அந்த திருமுறைகளை உலகத்தவர் அறியும் வண்ணம் செய்தவர், அதை பன்னிரு தொகுதிகளாக தொகுத்து பிரித்தவர் என்ற பெருமைக்குரியவர், நம்பியாண்டார் நம்பி.

இவர் பிறந்த ஊரே திருநாரையூர் திருத்தலம். இந்த ஊரில் சவுந்தரநாயகி உடனாய சவுந்தரேசுவரர் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். இது நாரைக்கு முக்தி அளித்த திருத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில், இது 33-வது தலம்.


தல வரலாறு

புராண காலத்தில் ஆகாய மார்க்கமாக சில கந்தர்வர்கள் பறந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன், பழங்களை சாப்பிட்டு விட்டு, அதன் கொட்டைகளை கீழே வீசிக் கொண்டே சென்றான்.

அப்படி வீசப்பட்ட பழத்தின் கொட்டைகளில் சில, பூமியில் ஈசனை வேண்டி தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரின் மீது விழுந்தன.

இதனால் தவம் கலைந்த துர்வாச முனிவர் கோபத்தில், "பறவையைப் போல பழத்தைத் தின்று கொட்டைகளை உதிர்த்த நீ, நாரையாக மாறுவாய்" என்று சாபம் கொடுத்தார்.

தன் தவற்றை உணர்ந்து வருந்திய தேவதத்தன் மன்னிப்புக் கோரியும் பலன் இல்லை. நாரையாக மாறிய கந்தர்வன், இத்தலத்தில் உள்ள சவுந்தரேசுவரப் பெருமானை வணங்கி, சாப விமோசனம் தருமாறு கேட்டான்.

இதற்காக அனுதினமும் தன் அலகால் கங்கை நீர் கொண்டு வந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தான். அவனது பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான், ஒரு நாள் கடும் புயலையும், மழையையும் உண்டாக்கினார்.

நாரையாக இருந்த கந்தர்வன், அந்த புயல் மழையில் சிக்கி தவித்தான். இருந்தாலும் அலகில் கங்கைநீரை எடுத்துக் கொண்டு ஆலயம் நோக்கி வந்தான்.

வழியில் கடுமையான புயல் காற்றின் காரணமாக அவனது சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்தது. ஆலயத்திற்கு சற்று தொலைவில் அனைத்து சிறகுகளும் விழுந்த நிலையில், தத்தித் தத்தியே ஆலயத்தை அடைந்து, இறைவனுக்கு தான் கொண்டு வந்த கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்தான்.

இதனால் மகிழ்ந்த சிவபெருமான், நாரையாக இருந்த கந்தர்வனுக்கு மோட்சம் அளித்து அருள்புரிந்தார். நாரைக்கு இறைவன் அருள்பாலித்த காரணத்தால், இத்தலம் 'திருநாரையூர்' என்றானது.

நாரையில் சிறகுகள் முற்றிலுமாக விழுந்த ஊர், சிறகிழந்தநல்லூர் என்ற பெயரில் திருநாரையூருக்கு கிழக்கே 2 மைல் தொலைவில் இருக்கிறது.

பழமையான இந்த ஆலயம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. என்றாலும் முழுவதும் கற்றளியாய் காட்சியளிக்கும் இந்த ஆலயம், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது.

இந்த ஆலயத்தில் பாக முனிவர், நாராயண முனிவர், அகத்தியர், மாமன்னன் ராஜராஜசோழன், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

இந்த ஆலயத்தில் தினமும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றது. மேலும் வழக்கமான பட்ச, மாத, வருடாந்திர உற்சவங்களும், திருவிழாக்களும் நடக்கிறது.

தவிர நம்பியாண்டார் நம்பி முக்தியடைந்த தினத்தில் குரு பூஜை விழாவும், வைகாசி புனர்பூச நட்சத்திர நாளில் நாரை முக்தி அடைந்த நிகழ்வும் வெகுவிமரிசையாக நடந்தேறுகிறது.

இத்தலத்தில் பவுர்ணமியில் இருந்து நான்காவது நாள் வரும் சதுர்த்தி தினத்தில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு, சங்கடங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அந்த நாளில் இவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்படுகிறது.

சந்திரன் உதயமாகி வரும் நேரம் வரை நடைபெறும் இந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தங்களின் சங்கடங்கள் தீர பிரார்த்தனை செய்கின்றனர்.


ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்தின் முன்புறம் தல தீர்த்தமான செங்கழுநீர் தீர்த்தம் உள்ளது. கோவிலின் முன் வாசலைக்கடந்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம் உள்ளது. அடுத்ததாக உயர்ந்து நிற்கும் மூன்று நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது.

அதை அடுத்து மகா மண்டபத்தில் சிவகாமி உடனாய நடராஜர் தென்முகம் நோக்கி அருள்கிறார். இதையடுத்து கருவறையில் கிழக்கு நோக்கி சிவலிங்க ரூபமாக சவுந்தரேசுவரர் வீற்றிருக்கிறார். அர்த்தமண்டபத்தில் செப்புத் திரு மேனிகள் இடம்பெற்றுள்ளன.

ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் தென்பகுதியில் தனிச்சன்னிதியில் சமயாச்சாரியார்கள், சந்தனாச்சாரியார்கள், சேக்கிழார், அகத்தியர், பாகமுனிவர், நாராயணமுனிவர் திருவுருவங்கள் உள்ளன. பிரகாரத்தின் மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் பொள்ளாப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார்.


இவர் உளியை வைத்து செதுக்காத பிள்ளையார் ஆவார். இவரது சன்னிதியின் மகாமண்டபத்துள் ஆறுமுகன் உருவமும், நம்பியாண்டார் நம்பி, ராஜராஜசோழன் ஆகியோரது திருவுருவங்களும் இடம்பெற்றுள்ளன


வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, வடக்கு பிரகாரத்தில் திருமூலநாதர் எனப்படும் சுயம்பிரகாசர், சண்டிகேசுவரர் சன்னிதிகளும் இருக்கின்றன.

கருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை வீற்றிருக்க, அடுத்ததாக சனி பகவான், மூன்று பைரவர்கள் மற்றும் சூரியன் ஆகியோர் உள்ளனர்.

வெளிப்பிரகாரத்தில் கொடிக்கம்பத்தின் அருகில் தென்திசை நோக்கி திரிபுரசுந்தரி அம்பாள் அருள்பாலிக்கிறார். நம்பியாண்டார் நம்பிக்கு ஆலயத்தின் வெளியே முகப்பு வாசலுக்கு தெற்கில் தனிக் கோவில் இருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, திருநாரையூர் திருத்தலம்.

காட்டுமன்னார்கோவிலில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. திருநாரையூருக்கு அருகாமையில் உள்ள ரெயில் நிலையம், சிதம்பரம் ஆகும்.

Tags:    

Similar News