வழிபாடு

மலையப்பசாமி, வேணுகானம் இசைக்கும் புல்லாங்குழலுடன் வேணுகோபாலசாமி அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா: உற்சவர் மலையப்பசாமி முத்துப்பந்தல் வாகனத்தில் வீதிஉலா

Published On 2022-09-30 04:34 GMT   |   Update On 2022-09-30 04:34 GMT
  • இன்று காலை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடக்கிறது.
  • இன்று இரவு சர்வ பூபால வாகன வீதி உலா நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிங்கத்தின் மீது யோக பட்டயம் அணிந்தவராக, கால்களை மடித்து குத்திட்டு அமர்ந்தபடி யோக நிலையில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் அணிவகுத்துச் சென்றன. மலையப்பசாமி வீதி உலா வந்தபோது நான்கு மாட வீதிகளின் ஒவ்வொரு திருப்பத்திலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். வாகன வீதி உலாவுக்கு முன்னால் பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். கலைக் குழுவினர் கோலாட்டம் ஆடினர். மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதி உலா நடக்கிறது.

Tags:    

Similar News