பிரம்மோற்சவ விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் கோவிந்தராஜசாமி வீதிஉலா
- உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை சூரியபிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன வீதி உலா முடிந்ததும் காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய சுகந்த திரவியத்தால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை 'வேணுகோபாலசாமி' அலங்காரத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை ஊஞ்சல்சேவை, இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.
நாராயணவனம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 2-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், 'முரளிகிருஷ்ணர்' அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாா்.
அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.