திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 3 டன் மலர்களால் புஷ்ப யாகம்: உற்சவர்கள் வீதி உலா
- தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
- உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 26-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நடந்தது. பிரம்மோற்சவ விழா மற்றும் நித்ய கைங்கர்யங்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று கோவிந்தராஜசாமி கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி காலை 9.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவில் தலைமை அர்ச்சகர் ஏ.பி.சீனிவாச தீட்சிதர் தலைமையில் மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி, துளசி, மருவம், தவனம், வில்வம், பன்னீர் இலை என 12 வகையிலான 3 டன் பாரம்பரிய மலர்களால் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தினர்.
புஷ்ப யாகத்துக்கு தேவையான மலர்களை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் வாகனங்களில் காணிக்கையாக கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். புஷ்ப யாகம் முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.