திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 3 டன் மலர்களால் பத்ர புஷ்ப யாகம்
- உற்சவர்களுக்கு திருவீதி உற்சவம் நடந்தது.
- அங்குரார்பணம், நவகலச ஸ்தாபனம் ஆகியவை நடந்தன
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் பத்ர புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை சாஸ்திரபூர்வமாக விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவச்சனம், அங்குரார்பணம், நவகலச ஸ்தாபனம் ஆகியவை நடந்தன.
அதைத்தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர்களாக சோமஸ் கந்தமூர்த்தி, காமாட்சி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பத்ர புஷ்ப யாக மகோற்சவம் நடந்தது.
அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா, அல்லி போன்ற பல்வேறு வகையான மலர்கள் மற்றும் இலைகளால் புஷ்ப யாகம் எனப்படும் புஷ்பார்ச்சனை செய்யப்பட்டது. அதற்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்களும், பக்தர்களும் சுமார் 3 டன் எடையில் 12 வகையான மலர்கள், 6 வகையான இலைகளை காணிக்கையாக வழங்கினர். மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர்களுக்கு திருவீதி உற்சவம் நடந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் பிற திருவிழாக்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷத்துக்கு பரிகாரமாக இந்தப் பத்ர புஷ்ப யாகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.