திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்: காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன்
- உற்சவர் முருகப்பெருமானுக்கு 250 பால்குட அபிஷேகம் நடந்தது.
- பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா இன்று விமரிசையாக நடை பெற்றது. இதைதொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், மயில்காவடிகள் எடுத்தும், 250 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.
காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் 250 பால்குட அபிஷேகம் நடந்தது.
மதியம் 1 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரா தனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரம் விழாவையொட்டி மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலால், பக்தர்களின் வசதிக்காக மலைக்கோவில் வளாகத்தில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.