வழிபாடு

நினைத்த காரியம் வெற்றி பெற... ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் கோவில்...

Published On 2024-07-15 13:52 GMT   |   Update On 2024-07-15 13:52 GMT
  • மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன.
  • ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் 'காட்டுவீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு காட்டுவீர ஆஞ்சநேயரின் திருக்கோயில் இல்லை. இந்த பகுதி குன்றுகளாகவும் விளைநிலங்களாகவுமே இருந்துள்ளது. இந்த விளைநிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூசித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே சென்றது.


ஆஞ்சநேயரின் மீது அளவற்ற பக்தியையும் நம்பிக்கொண்டு மக்கள் வழிபட்டு வருவதை கண்ட வெங்கட்ராம செட்டியார், அங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என முடிவு செய்தார். திருக்கோயில் கட்டுவதற்கு தன்விளைநிலத்தில் இருந்து எவ்வளவு அளவு இடம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என ஊர்மக்களிடம் கூறியுள்ளார். பிறகு இதற்கென்று அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது, திருக்கோயிலானது எழிலுற எழுந்தது.

மூலவர் ஸ்ரீஅருள்மிகு ஆஞ்சநேயர் ஒற்றைப் பாறையின் மீது செதுக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. இந்த சிற்பத்தை செதுக்கியவர் யார் என்பது தெரியவில்லை என்றாலும் வரலாறு செவி வழி செய்தியாக ஒரு தகவலைக் கூறுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் மார்கத பிராமணர் என ஒருவர் இருந்தாராம். இவர் அனுமன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இதனால் இவர் பல ஊர்களுக்குச் சென்று அங்குள்ள பாறைகளின் மீதும் மலைகளின் மீதும் அனுமன் சிலைகளை செதுக்கி வந்தாராம். இதனால் அனுமனின் மீது பலருக்கும் பக்தி வரும் என்று எண்ணி உள்ளார். அதனால் இதுவும் அவருடைய கைவண்ணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஏனென்றால் அவர் வடிவமைத்த அனுமன் சிற்பங்கள் அனைத்திலும், அனுமன் வலது புறம் திரும்பி நின்றும், தலை மேல் நோக்கியும் , வால் தூக்கி நின்றவாறும், வாலில் சிறிய மணி ஒன்று கட்டியவாறும் இருக்கும். இங்கும் அவ்வாறே உள்ளது. ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.


ராம நாமம் எழுகிறதோ அவ்விடத்தில் நிச்சயம் அனுமன் இருப்பார். இங்கும் ஆஞ்சநேயர் கோயிலின் வலது பக்கம் பொன்மலை எனும் சிறுமலையொன்றுள்ளது. அங்கு ஒரு பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் அனுமன் வலது புறம் திரும்பி தலை தூக்கி மலைமீதுள்ள பெருமாளைத் துதித்தபடி நின்றிருக்கிறார். இதனை காணக் கண் கோடி வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து ஸ்ரீமத் பாலமுருக நரசிம்ம ஸ்வாமி எனும் சித்தர் ஒருவர் காட்டுவீர ஆஞ்சநேயரை தரிசிக்க வந்துள்ளார். அவர், ஹரியும் சிவனும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் சிறப்பை பெற்றுள்ளது இத்திருத்தலம் என கூறியிருக்கிறார். ஹரிக்கு உகந்தவரான அனுமனும், சிவபெருமானுக்கு உகந்தவரான நந்தீஸ்வரரும் ஒரே இடத்தில் எழுந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வேறு எங்குமே காணப்படாத அதிசயம் என்றும் கூறியுள்ளார்.

மூலவருக்கு இடது புறம் பெரிய உருண்டை பாறையின் மீது சிறிய நந்தீஸ்வரர் சிலை ஒன்று உள்ளது. இச்சிலை வளர்ந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எல்லா அனுமன் கோயில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம் எனலாம். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். எவரொருவர் ஒரு முழுத்தேங்காயை, மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றாரோ, அவருடைய கோரிக்கைகள் மூன்று மாதங்களுக்குள்ளாக நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாளன்று மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஏராளமாகப் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எனப்படும் சேலம் பைபாஸை ஒட்டிய இடதுபுற சாலையில் அமைந்துள்ள தேவசமுத்திரத்தில் கலையம்சத்துடன் வளர்ந்து நிற்கிறது அருள்மிகு ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சிநேயர் திருக்கோயில்.

Tags:    

Similar News