- வடநாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது துர்காஷ்டமி.
- நவராத்திரியில் எட்டாவது நாள் துர்க்காஷ்டமி நாளாக கொண்டாடப்படுகிறது.
துர்காஷ்டமி தினத்தில் துர்கையின் நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தி தோன்றினாளாம். இவள் சண்டன் - முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை இந்த தினத்தில் அழித்தாள். எனவே, அதீத சக்தியும் வல்லமையும் கொண்டதாகத் திகழ்கிறது இந்த துர்காஷ்டமி தினம்.
வடநாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது துர்காஷ்டமி. மக்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து கர்பா நடனம் ஆடிக் கொண்டாடுவார்கள். அன்று முழுவதும் துர்கா மாதாவுக்கு கோலாகலமான வழிபாடுகள் நடைபெறும்.
தேவிக்கு புனித பலியாக எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய்கள் உடைத்து வழிபடுவார்கள், தீமையை அழிக்க வேண்டுவார்கள்.
நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை 'துர்காஷ்டமி' என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு.
துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் பிராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சக்திகளும் ஒன்றிணைத்து செயலாற்றும் துடியான நாள் இது என்கின்றன ஞான நூல்கள். ஆகவே இந்த தினத்தில் அம்பாள் தரிசனமும் வழிபாடும் பன்மடங்கு பலனை அள்ளித் தரும் என்பர்.
இளம் சிறுமியர் தேவியாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள். மேற்கு வங்கத்திலும் இந்த நாளில் துர்கா பூஜை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த துர்காஷ்டமி கோவில்களில் விமரிசையாகவும் வீடுகளில் எளிமையாகவும் கொண்டாடப்படுகிறது.
வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில்... ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்தபிறகு, கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும்.
அணிமா முதலான எட்டுச் சக்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் இந்த தேவி, அபய - வரதம், கரும்பு வில் மற்றும் மலர் அம்பு ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவாள்.
இந்த நாளில் 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க வேண்டும். இதனால் செயற்கரிய செயல்களையும் எளிதில் செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும், சத்ரு பயம் நீங்கும்.
கொலு வைக்காதவர்கள் அன்றைய தினம் தங்கள் வீடுகளில் உள்ள அம்பிகை படம் அல்லது விக்ரகத்துக்கு முல்லை, மல்லிகை அல்லது வெண் தாமரை மலர்கள் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபமிட்டு, நல்லெண்ணெய் தீபமேற்றி, தேங்காய் சாதம், கொண்டைக்கடலை சுண்டல் ஆகியவற்றைப் படைத்து துர்கையை வணங்கலாம்.
அப்போது துர்கைக்கு உரிய பாடல்களை மனமுருகிப் பாடி துதிக்கலாம். வீட்டில் வழிபட வசதி இல்லாதவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கு கோஷ்டத்தில் எழுந்தருளியிருக்கும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி (வீட்டில் எலுமிச்சை தீபமேற்றக்கூடாது) செவ்வரளி மாலை - சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடலாம்.
ராகு கால நேரத்தில் துர்கையை தரிசித்து வழிபடுவது விசேஷம்.