பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நாளை நரசிம்ம பிரம்மோற்சவம்
- ஜூலை 3-ந்தேதி தேர்த் திருவிழா நடக்கிறது.
- 5-ந்தேதி ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
ஆண்டுதோறும் பார்த்த சாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும் மற்றும் நரசிம்ம ருக்கு ஆனி மாதமும் பிர மோற்சவம் நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டிற்கான நரசிம்மர் பிரம்மோற்சவம் வரும் நாளை (27-ந் தேதி) துவங்குகிறது.
அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் துவஜாரோகணம் எனும் கொடியேற்ற விழா நடக்கிறது.
விழாவின் இரண்டாம் நாளான 28-ந் தேதி இரவு, சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். 29-ந் தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு கோபுர வாசல் தரிசனமும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின், 5-ம் நாள் விழாவான ஜூலை 1-ந் தேதி காலை பல்லக்கில் நாச்சியார் திருக்கோலமும், மாலை யோக நரசிம்மன் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது.
விழாவின் பிரதான நாளான, ஜூலை 3-ந் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் உற்சவர் தேரில் எழுந்தருளுகிறார்.
காலை 7.15 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. வரும், ஜூலை, 5-ந் தேதி ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. அன்று இரவு அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.