திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று தேரோட்டம்
- தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்கள் தேரின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-ம் நாள் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது.
5-ம் நாள் விழாவில் பல்லக்கு நாச்சியார் திருச்சேவை புறப்பாடு நடந்தது. அதைத் தொடர்ந்து யோக நரசிம்மர் திருக்கோலத்தில் உற்சவர் புறப்பாடு நடந்தது.
விழாவின் 7-ம் நாளான இன்று முக்கிய விழாவாக தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளை சுற்றி வலம் வந்தது. தேருக்கு முன்பு இசை வாத்தியம் முழங்க பக்தி பாடல்களை பாடியபடி பக்தர்கள் வந்தனர்.
தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்கள் தேரின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி தேரில் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
தேர் வலம் வந்த மாட வீதி முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானங்கள் மற்றும் குளிர்பானங்களை பொதுமக்கள் வழங்கினார்கள். மாட வீதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளின் முன்பும் கோலம் போடப்பட்டு இருந்தது.