திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 2-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு
- திருவிழாக்கள் ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளன.
- ஜனவரி 2-ந்தேதி இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இந்த ஆண்டும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக கடந்த 23-ந்தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து விழாவும் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாக்கள் ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளன.இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 2-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறும். இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு உள் பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். அதன் பிறகு அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் நடக்கிறது.
இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது. 11.30 மணக்கு பார்த்த சாரதி சுவாமி உற்சவர், நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறுகிறது.