null
பக்தர்களை பிரமிக்க வைக்கும் விஷ்ணுவின் திரிவிக்ரம அவதாரம்
- உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார்.
- திரிவிக்ரம அவதார வடிவில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார்.
இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார். அந்த பிரகலாதன் வழியில் வந்த மகாபலி சக்ரவர்த்தி அறத்தின் வழி நடக்காது ஆட்சி செய்தமையால் அவனை அழிக்க மகாவிஷ்ணு மேற்கொண்ட திரு அவதாரம் திரிவிக்ரம அவதாரம்.
மகாவிஷ்ணு வாமனனாக வடுரூபத்தில் வந்து மகாபலியிடம் தான் தவம் செய்ய விரும்புவதால் தனக்கென தன் காலால் 3 அடி இடம்கேட்க, மகாபர்யும் கொடுக்க நீரேற்று (தாரைவார்த்து) தானம் பெற்ற மூவடியை தன் சேவடி கொண்டு அளக்க திரிவிக்ரமனாய் விண் முட்ட எழுந்தார்.
பேருரு கண்டு பிரமிப்படைந்த மகாபலி அரசனின் முன்பாக ஒரடியால் உலகையளந்து, மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து 3-வது அடிக்கு இடம் கேட்க அரசன் குனிந்து தலையைக் காட்ட, தம் திருவடியால் தலையை பாதாளத்தில் அழுத்தினார். மேற்கண்ட திருக்கோலத்தில் உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார்.
பெருமாள் மேற்கே திருமுக மண்டலத்துடன் திரிவிக்ரம அவதார வடிவத்தில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார்.
தனது இடது கரத்தினை நீட்டி அதில் இரண்டு விரல்களைக் காட்டி, தனது இரண்டு அடிகளால் மண்ணையும், விண்ணையும் அளந்து முடித்ததை உணர்த்தி, வலது கரத்தில் மீதம் உள்ள ஓரடிக்கு இடம் எங்கே என்று கேட்பது போல ஒரு விரலைக் காட்டியும் மகாபலியின் திருமுடிமீது வலத் திருவடியை சாத்தியும், இடத் திருவடியை ஆகாயத்திற்கும் பூமிக்கு மாய் அளந்து விட்டது கோல் உயர்த்தியும் பெருமாள் கம்பீரமாக, உலகளந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இத்திருக்கோவிலில் உள்ள உலகளந்த பெருமாளின் பேருருவை கொண்டு திரிவிக்கிரம அவதார உலகளந்த பெருமாளின் திருமுக மண்டலம் சேவை செய்விக்கப்படுகிறது.
இத்திருக்கோவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ளது.
திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திவ்ய பிரபந்தம்
நன்றிருந்து யோகந்தி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்றிருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்றிருந்த மாடநீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்றிருந்து வெஃகணைக் கிடந்து என்ன நீர்மையே?
நின்றதெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதுமிருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.
- திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்