பிரம்மோற்சவ விழா நிறைவு: திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
- தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.
- பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை மாலை என இரு வேளைகளிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 1-ந் தேதி இரவு நடந்தது. கருட சேவையை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
தீர்த்தவாரியை ஒட்டி சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வேத பண்டிதர்கள் வேதங்களை முழங்க தீர்த்தவாரி நடந்தது. அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.
கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
திருப்பதியில் நேற்று 68,539 பேர் தரிசனம் செய்தனர். 21,077 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.90 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.