வழிபாடு

உழைக்கும் மக்களின் உற்ற துணை வெக்காளியம்மன்

Published On 2022-09-19 08:48 GMT   |   Update On 2022-09-19 08:48 GMT
  • உழைக்கும் மக்களின் உற்ற துணையாக இந்த வெக்காளி விளங்குகிறாள்.
  • வெக்காளியின் கோவிலை மிதித்தவர்களுக்கு வேதனை எதுவுமே அண்டாது.

கோபம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எடுப்பித்த பத்தினிக் கோட்டமே இப்போது வெக்காளி கோவிலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் வெக்காளி கண்ணகியே என்றும் கூறப்படுகிறது. இதனால் தேவி வீர ஆசனத்தில் தீ சுவாலையுடன் நாகமும் கொண்ட கிரீடமும் சிவந்த அதரங்களும் கொண்டு விளங்குகிறாள். உடுக்கை, பாசம், சூலம் ஏந்தி அசுரனை மிதித்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

உழைக்கும் மக்களின் உற்ற துணையாக இந்த வெக்காளி விளங்குகிறாள். அதனால் ஏழை எளிய மக்களின் கூட்டமே இந்த ஆலயத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். குறைகளைத் தீர்த்துக் கொள்ளவோ, ஏதேனும் வேண்டியோ இங்கு வரும் பக்தர்கள், தங்களின் கோரிக்கைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி விண்ணப்பித்து வெக்காளியின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி, பிறகு அதை அங்குள்ள சூலத்தில் கட்டி வைப்பார்கள். அப்படி கட்டிய நாளில் இருந்து 40 நாட்களுக்குள் அன்னை அந்த வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை. அது பெரும்பாலும் நடைபெறுகிறது என்பதும் உண்மை.

இங்கு ஸ்ரீவல்லப கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி - தெய்வானை சமேத மயூர கந்தன், காத்தவராயன், புலி வாகன பெரியண்ணன், மதுரை வீரன், ஸ்ரீதுர்க்கை, பொங்கு சனீஸ்வரர் என பல சந்நிதிகள் உள்ளன. வெக்காளி அம்மனுக்கு ஆண்டுதோறும் அநேக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. பவுர்ணமியில் நடைபெறும் அபிஷேக வைபவம் அற்புதமான தரிசனம் எனலாம்.

அதுபோக, சித்திரை திருவிழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், ஆனி கடைசி வெள்ளியில் காய்கனிகள் அலங்கார வழிபாடு, .ஆடி வெள்ளியில் சிறப்புவைபவங்கள். ஆவணியில் சண்டிஹோமம், புரட்டாசியில் நவராத்திரி வழிபாடு, கார்த்திகையில் தீப விழா, தை பொங்கல் வழிபாடு, மாசி கடைசி ஞாயிறில் லட்சார்ச்சனை, பங்குனி முதல் வெள்ளியில் அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா என இந்த ஆலயத்தில் கொண்டாட்டத்துக்கு குறைவே இல்லை எனலாம். ஆனாலும் இங்கு ஆடியின் ஒவ்வொரு நாளுமே இங்கு சிறப்பு என்றே சொல்லலாம்.

பெருமைகள் பல கொண்ட, அம்பிகைக்கே உரித்தான இந்த ஆடியில் வாய்ப்பு இருப்பவர்கள் உறையூர் சென்று வெக்காளியின் அருள்பெற்று மகிழலாம். வெக்காளியின் கோவிலை மிதித்தவர்களுக்கு வேதனை எதுவுமே அண்டாது என்பார்கள். தோஷங்கள் விலகும் தலம், பாவங்கள் தொலையும் தலம். புண்ணியங்கள் சேரும் தலம் வெக்காளியின் திருத்தலம். அன்னையின் திருவருளால் நாடும் வீடும் சகலமும் நலம் பெற்று வாழட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

Tags:    

Similar News