வழிபாடு

வைகாசி விசாகத் திருவிழா: வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம்

Published On 2024-05-19 05:53 GMT   |   Update On 2024-05-19 05:53 GMT
  • வைகாசி விழாவையொட்டி மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.
  • தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை:

சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விசாகத் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விழாவையொட்டி மங்கள கிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.

பின்னர் சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடு, ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வ யானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, நாக வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்தி புறப்பாடும், நேற்று யானை புறப்பாடும் நடந்தது.

இந்த நிலையில் பிரம் மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இரவு ஒய்யாவி உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வைகாசி விசாகமான 22-ந்தேதி காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், கலசாபி ஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் விழா நிறைவு பெறுகிறது.

வருகிற 23-ந்தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. அதன் பின்னர், வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள், 24-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை நடை பெறுகிறது.

இதையொட்டி தினமும் மாலையில் பரத நாட்டியம், இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை செற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News