வழிபாடு

ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் தொடக்கம்

Published On 2023-01-19 05:06 GMT   |   Update On 2023-01-19 05:06 GMT
  • ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
  • ரெங்கநாச்சியார் திருவாபரணங்கள் அணிந்து திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவுபெற்றதை தொடர்ந்து கடந்த 13-ந் தேதி முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 5 நாட்கள் நடைபெற்றது. பகல் பத்து உற்சவ நாட்களில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே இரண்டாயிரம் திருவாய்மொழி பாசுரங்களை தினமும் மாலையில் கேட்டருளினார்.

இதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ரெங்கநாச்சியார் சவுரிக்கொண்டை, அர்த்த சந்திரா, நெற்றிச்சரம், வைரத்தோடு, வைர அபய ஹஸ்தம், பருத்திக்காய் காப்பு மாலை, 6 வடம் முத்துச்சரம், பங்குனி உத்திரப்பதக்கம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளினார்.

முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு அலங்காரம், கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி பாசுரங்களை கேட்டருளினார். பின்னர் அங்கிருந்து ரெங்கநாச்சியார் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Tags:    

Similar News