வழிபாடு

வைகுண்ட ஏகாதசி பிறந்தது எப்படி?: சொர்க்க வாசல் உருவான கதை

Published On 2023-01-02 08:52 GMT   |   Update On 2023-01-02 08:52 GMT
  • பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்க வாசல் திறப்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  • வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்புக்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார்.வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க பெருமாள் சென்றார். இதைப் பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன், பெருமாளை கொல்ல ஒரு வாளை ஓங்கியபடி வந்தார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள்.

முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் வரமளித்தார். இதனால் இந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

சொர்க்க வாசல் உருவான கதை

படைப்பு கடவுளான பிரம்மாவின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அப்படி ஊழிக்காலம் தொடங்கியதும். மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மன் அடங்கினான். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கியதும், தாமரை இலை தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க, அதில் சில துளிகள் பிரம்மனின் காதுகளில் சென்றன.

விழித்த பிரம்மன் முதல் வேலையாக பிராண வாயுவை தூண்டினார். அப்போது அவரின் இரு காதுகளில் இருந்து காது அசுத்தத்துடன் அந்த தண்ணீர் வெளியே வர ஒன்று மிருதுவானதாகவும், மற்றொன்று கடினமானதாகவும் மது, கைடபர் என அரக்கர்களாக உருவெடுத்தன. அப்போது பிரம்மனிடம் ஒலி வடிவில் இருந்த வேத ங்களை அந்த இரட்டையர்கள் திருடி சென்றனர். அப்போது ஹயக்ரீவராக அவதரித்த பெருமாள் வேதங்களை திரும்ப கொண்டு வந்தார். பின்னர் உலகில் உள்ள உயிர்களை துன்புறுத்த துவங்கினர். தேவர்கள், முனிவர்கள் என அனைத்து உயிரினங்களும் விஷ்ணுவிடம் முறையிட, அவர்களை அடக்க இறைவன் புறப்பட்டார்.

மது, கைடபருடன் போரிட்ட பெருமாள் அவர்களை அழிக்க முற்பட்டார். அப்போது அந்த சகோதரர்கள் சரணடைந்தனர்.உங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும், நாங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும் வழியை காட்டுங்கள் என கேட்டுக் கொண்டனர்.அவ்வாறே அவர்களுக்கு பெருமாள் அருளினார். மேலும் எங்களைப் போல பலரும் இந்த பாக்கியத்தைப் பெற வேண்டும் என்பதற்காக திருமாலிடம் கேட்டுக் கொண்டனர்.

அதோடு வைகுண்ட ஏகாதசி திருநாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் தாங்கள் வெளியே வரும் போது, தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவத்தை எண்ணி வருந்தி அதை திருத்திக் கொள்பவர்களுக்கும் முக்தி அளிக்க வேண்டும் என அசுர சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர்.இதன் காரணமாக தான் வைகுண்ட வாசல் உருவானது. அதோடு மது கைடபர் ஆகியோரை அடக்கியதால் மதுசூதன் என்ற பெயர் பெருமாளுக்கு வந்தது.

Tags:    

Similar News