திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம்
- விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
- இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடக்காது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் இன்று நடைபெற்றது.
வருசாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விமான கலசங்களுக்கு கும்பம் எடுத்து வரப்பட்டு காலை 9.40 மணிக்கு மேல் தளத்தில் அமைந்துள்ள மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் சந்நிதிகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. இரவு மூலவருக்கு அபிசேகம் நடக்காது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.