வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
- அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம்.
- வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாணசுந்தரா் நான்கு வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம். இந்த கோவில் புராணகாலத்தில் ரிக், யஜூர், சாம, அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களும் தங்கி இறைவனை வழிபட்டதாக வரலாறு.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் தன்னை வழிபட்ட நான்கு வேதங்களுக்கும், சாமி காட்சியளித்து சிறப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெற்று வருகிறது.. அதன்படி ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக காலை நான்கு வேதங்கள் சாமி சன்னதியில் எழுந்தருளியது.
சிறப்பு தீபாராதனைக்கு பிறகு நான்கு வேதங்களுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கல்யாணசுந்தரா் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது. நாகை சாலையில் உள்ள புனித தீர்த்தமான வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஏரி படித்துறையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வேதாமிர்த ஏரியில் புனித நீராடிசாமி தரிசனம் செய்தனர்.