வழிபாடு

வாரம் ஒரு திருமந்திரம்: இந்தவார திருவாசகம் உங்களுக்காக...!

Published On 2024-04-02 04:50 GMT   |   Update On 2024-04-02 04:50 GMT
  • மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடி உள்ளார்.
  • பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.

மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே.

விளக்கம்:

குற்றமற்ற தூய ஒளியே... மலர்கின்ற மலர் போன்ற இனிய சுடரே! ஒளியுருவினனே.. தேன் நிறைந்த அமு தமே! சிவபுரம் கொண்டவனே.. பாசமாகிய கட்டினை அறுத்து திருவருள்புரியும் அறிவில் சிறந்தோனே. இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய, என் உள்ளத்தில் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே! தெவிட்டாத அமுதமே! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே! ஆர்வமும் முயற்சியும் இல்லாதவர்களின் உள்ளத்தில், வெளிப்படாமல் மறைந்திருக்கும் ஒளி பொருந்தியவனே.. என் உள்ளத்தை நீர் என உருகச் செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே! இன்ப-துன்பங்களுக்கு அப்பாற்பட்டு உள்ளத்தில் நிற்பவனே.

Tags:    

Similar News