null
குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துவதன் ஐதீகம் என்ன...?
- ஒன்றாவது வயதுவரை குழந்தை இறைவனின் சொத்து.
- எந்த ஒரு பொருளின் மீதும் பற்று இருக்காது.
ஆண்டவனின் சொத்தை நமது சொத்தாக அங்கீகரித்துக் கொள்ளும் நிகழ்வு அது. ஒன்றாவது வயதுவரை அந்த குழந்தை இறைவனின் சொத்து. ஒரு வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகள் உறங்கும் போது சிரிப்பதை காணலாம். அவர்களது கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயதுவரை அந்த குழந்தைக்கு இந்த உலக வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாது. எந்த ஒரு பொருளின் மீதும் பற்று இருக்காது. அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள்.
ஒரு வயது முடிந்து இரண்டாம் வயதைத் தொடங்கும் குழந்தைக்கு மெள்ள, மெள்ள ஆசை தலை தூக்குகிறது. இது என் பொம்மை, இந்த பந்து எனக்கு வேண்டும் என்று கொஞ்சம், கொஞ்சமாக நான், எனது என்று சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறது. பற்றற்ற நிலை காணாமல் போகிறது. தெய்வத்தன்மை குறையத் தொடங்கி மனிதனுக்கு உரிய குணங்கள் வளர ஆரம்பிக்கின்றன.
ஆசைகளை முற்றிலுமாகத் துறந்து ஒரு மனிதனால் வாழ இயலாது என்றாலும் அவனது ஆசைக்கு ஒரு அளவு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், அழகு என்பது முக்கியமல்ல, ஆண்டவனின் அருள்தான் முக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று அழகு தரக்கூடிய முடியைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.
இறைவன் கொடுத்த மதிப்பிட முடியாத இந்த சொத்தினை மனிதர்களாகிய நாங்கள் அனுபவிக்க இருக்கிறோம் என்ற அடையாளத்திற்காகவும் அந்த குழந்தையின் உடம்பில் விபத்து, நோய் முதலான காரணங்களால் எந்தவித பின்னமும் உண்டாகக்கூடாது, அதற்காக நாங்களே ஒரு பின்னத்தை உண்டாக்கி நீ கொடுத்திருக்கும் சொத்தினைப் பெற்றுக் கொள்கிறோம் என்று ஆண்டவனிடம் விண்ணப்பிக்கும் விதமாக அந்த குழந்தைக்குக் காது குத்துகிறார்கள்.
'தான்' என்ற அகங்காரம் அந்த குழந்தைக்கு எந்த வயதிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஒருவயது முடியும் தறுவாயில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துகிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.