பெண்கள் உலகம்

வலைத்தளங்களில், அன்பை கவனமாக பகிருங்கள்..!

Published On 2023-04-04 08:04 GMT   |   Update On 2023-04-04 08:04 GMT
  • திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
  • மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

டென்மார்க்கில் உள்ள மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், சமூக வலைத்தளங்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வை நடத்தியது. அதில் சமூக ஊடகங்களில் வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் காதலர்கள், தம்பதிகளிடையே பெருகிவருவதாக கண்டறிந்துள்ளனர். இதுமட்டுமல்ல, பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்திருக்கின்றன.

இதுபற்றிய ஆய்வு நடத்திய மார்ட்டீன் கூறுகையில்... ''சமூக வலைத்தளங்களில், தங்களது குடும்ப வாழ்க்கை பற்றியும், காதல் வாழ்க்கை பற்றியும் அதிகமாக பகிர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை வெளிகாட்டிக்கொள்ள இப்படியான படங்களை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்ற அந்தரங்கமான தருணங்களின்போது எடுக்கப்பட்ட படங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பேரார்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தங்களை மகிழ்ச்சியானவர்களாக சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும், தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? 'இல்லை' என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஏனென்றால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும், தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.

காதலர்கள் இப்படி தொடர்ந்து தங்களுடைய பரஸ்பர அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருக்கிறது என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்குத்தான். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்கள், தங்களுடைய உறவைப் பற்றி சமூக ஊடகங்களில் வாயே திறப்பதில்லையாம். மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் வெளி உலகுக்கு தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாக சமூக ஊடகங்களில் தங்களுடைய மகிழ்ச்சியான உறவை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்'' என்று கூறினார்.

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும், தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.

Tags:    

Similar News