பெண் குழந்தைகள் 14 வயதாகியும் பருவமடையவில்லையா?
- 11 வயதிலேயே பருவமடைவது தற்போது சாதாரண விஷயம்.
- ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.
பெண் குழந்தைகள் பருவ மடைதல் மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம். நாகரீகம் மற்றும் மருத்துவம் முன்னேற்றம் அடைந்துள்ள இப்போதைய காலகட்டத்தில் 92 முதல் 94 சதவீத பெண் குழந்தைகள் 12 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.
மேலும் சில பெண் குழந்தைகள் 11 வயதிலேயே பருவமடைவதும் தற்போது மிகவும் சாதாரண விஷயமாகவே கருதப்படுகிறது.
இதற்கு முந்தைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் 14 வயது மற்றும் 15 வயதில் பருவமடையும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. அதன் விளைவாக 11 முதல் 13 வயதுக்குள் பருவமடைய தொடங்குகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகள் பருவமடைதல் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தனர்.
ஆனால் இப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கூட பருவமடைதல் பற்றி நிறைய விஷயங்கள் தெளிவாகவே தெரிகிறது. அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பெண் குழந்தைகள் பருவமடையாவிட்டால் அதற்கான காரணத்தை தங்கள் பெற்றோரிடம் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
மேலும் இதுபற்றி தங்கள் வகுப்பு தோழிகளிடமும் பேசி ஒருவருக்கொருவர் புரிதலை வளர்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் பருவமடையும் வயதை கடக்கும் போது இதை ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனையாக சில குழந்தைகள் எதிர்நோக்குகிறார்கள்.
உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 ஆயிரம் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை 15 வயதான பிறகும் பருவம டையாமல், மாத விலக்கு வராமல் இருக்கும் நிலை இன்றும் உள்ளது. பெண் குழந்தைகள் பருவமடையாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? இதை மருத்துவத்தில் பிரைமரி அனனோரியா என்று சொல்கிறோம்.
15 வயதான பிறகும் ஒரு பெண் குழந்தை பருவமடைய வில்லை என்றால் அந்த பெண் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாகவே பெண் குழந்தைகள் பருவமடைவதற்கு முன்பு உடல் ரீதியாகவே சில மாற்றங்கள் நடக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு 12 வயது பிறந்ததுமே உடலின் உயரம் அதிகரிக்க தொடங்கும். மார்பக பகுதியில் வளர்ச்சி ஏற்படும். அந்த பெண் குழந்தையை பரிசோதிக்கும் போது பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள் எல்லாமே உருவாகத் தொடங்கி இருக்கும். அதுபோன்ற மாற்றங்களால் அந்த பெண் குழந்தை 13 வயதில் பருவமடைந்து விடும்.
சிலநேரங்களில் அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும், அடி வயிற்றில் வலி இருக்கும். ஆனாலும் அதுபோன்ற குழந்தைகள் சரியான வயதில் பருவமடைந்து விடுவார்கள். 11 வயதில் இருந்து அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மாற்றங்களின் விளைவாக 12 அல்லது 13 வயதில் அவர்களுக்கு மாதவிலக்கு வந்துவிடும்.
இவை அனைத்தும் எதைக் குறிக்கிறது என்று பார்த்தோம் என்றால் சினை முட்டைகள், சினைப்பையில் வளரும் பொழுது அந்த பெண்ணுக்கு உடல் அளவில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக மாதவிலக்கு வருகிறது.
15 வயதாகியும் மாதவிலக்கு வரவில்லை என்று சில குழந்தைகள் சிகிச்சைக்கு வருவார்கள். அந்த குழந்தைகள் உயரம் மிகவும் குறைவாக இருப்பார்கள். உடல் அளவிலும் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாத விலக்கு வராமல் இருக்கும்.
ஆனால் பரிசோதனைகள் மூலமாக இதுபோன்ற குழந்தைகளுக்கு என்ன காரணத்தினால் மாதவிலக்கு வரவில்லை என்று பல நேரங்களில் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும்.
பெண் குழந்தைகளுக்கு சினை முட்டைகள் வளரும் போது அந்த வளர்ச்சிக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் உடலில் எல்லா இடங்களிலும் மாற்றங்களை உண்டாக்கலாம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இல்லாமல் சினை முட்டைகள் சரியாக வளராத பெண் குழந்தைகளுக்கு மார்பகத்தில் வளர்ச்சி இருக்காது. அந்த பெண் குழந்தை ஒல்லியாக இருப்பார்கள். உயரமும் குறைவாக இருப்பார்கள்.
ஒரு பெண் குழந்தை பருவமடைந்ததும் மாதவிலக்கு வருவது எதைக் குறிக்கிறது என்றால் அந்த பெண் குழந்தைக்கு சினை முட்டைகள் வெளியாகத் தொடங்கி விட்டது என்று அர்த்தம். ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும்.
அந்த பெண் குழந்தை வளர்ச்சி அடையும் போது சினைப்பையில் கோடிக்கணக்கில் முட்டைகள் காணப்படும்.
இந்த முட்டைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஹைபோதலாமஸ் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வர ஆரம்பிக்கும். இதனுடைய தூண்டுதலின் காரணமாகத்தான் இந்த முட்டைகள் வளரும். முட்டைகள் வளர வளர அதில் இருந்து வரும் ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.
மேலும் அந்த பெண் குழந்தைக்கு மார்பக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துமே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் தான். இந்த முட்டைகள் வளர்ந்து ஒரு காலகட்டத்தில் அது வெளிவர ஆரம்பிக்கும் போதுதான் கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி அடைந்து மாதவிடாய் வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சரியாக வராததற்கு முதல் முக்கியமான காரணம் முட்டை வளர்ச்சி இல்லாத நிலை தான். முட்டைகள் வளர்ச்சி யாருக்கு இல்லாமல் இருக்கும் என்பதை பார்க்கும்போது சிலருக்கு முட்டைகள் இருக்கும், ஆனால் அது வளர்வதற்கு தேவையான ஹார்மோன் இருக்காது.
அதாவது அதுபோன்ற பெண்களுக்கு மூளையில் இருந்து வரும் ஹார்மோன் தூண்டுதல் இல்லையென்றால் முட்டைகள் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இதனால் பருவமடைதல் விஷயத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது.
இன்னும் சில பெண் குழந்தைகளுக்கு சினை முட்டை இருக்கும். அந்த சினை முட்டை நன்றாகவே வளரும். அதற்கான ஹார்மோன் மாற்றங்களும் இருக்கும். மார்பகமும் வளரும். ஆனால் மாதவிலக்கு மட்டும் வராது. இது போன்ற சூழலுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகளே காரணமாகிறது.
அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கலாம் அல்லது கர்ப்பப்பையே உருவாகாமல் இருக்கலாம். அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் அதெல்லாம் சரியாக இருந்தும் மாதவிலக்கு வரவில்லை என்றால் முட்டைகள் இல்லாமல் இருக்கலாம்.