- உடல் ரீதியாக, மன ரீதியாக பல்வேறு துயரங்களை எதிர்கொள்கிறார்கள்.
- ஆரோக்கியத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, குழந்தை திருமணங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் உடல் ரீதியாக, மன ரீதியாக பல்வேறு துயரங்களை எதிர்கொள்கிறார்கள்.
அவற்றுள் டீன் ஏஜ் வயது கர்ப்பங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. குழந்தை திருமணங்களால் கர்ப்பத்தை தாங்கும் சக்தியை உடல் பெறமுடியாமல் போவதால் அவை ஆரோக்கியத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், குழந்தைத் திருமணத்திற்கு தள்ளப்படும் சிறுமிகளில் 5 பேரில் 3 பேர் டீன் ஏஜ் வயதுக்குள்ளேயே கர்ப்பம் அடைந்துவிடுவது தெரியவந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர், உத்தரப்பிரதேசத்தின் சந்தோலி, மகாராஷ்டிராவின் பர்பானி, ஒடிசாவின் கந்தமால் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள நான்கு மாவட்டங்களில் இருக்கும் 40 கிராமங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தைத் திருமணங்களுக்கும், பிற்போக்குத்தனமான நடைமுறைகளுக்கும், பாலின சமத்துவமின்மைக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வறுமை சூழல், வேறு இடங்களுக்கு இடம் பெயர்வது, காதல் போர்வையில் குடும்பத்துக்கு தெரியாமல் வேறு நபருடன் ஓடி விடுவாரோ என்ற பயம், திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகிவிடுவாரோ என்ற அச்சம் உள்ளிட்டவை குழந்தைத் திருமணத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
குழந்தைத் திருமணம் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி 16 சதவீத பெற்றோர் மற்றும் மாமியார்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. குழந்தைத் திருமணத்தை எதிர்கொள்ளும் சிறுவர்-சிறுமிகளில் 34 சதவீதத்தினருக்கு மட்டுமே அதன் பாதிப்பு புரிந்திருக்கிறது.