செய்திகள்
பசுமலைப்பட்டியில் நடந்த மாற்றுக்கட்சியில் இணையும் விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காட்சி.

தி.மு.க. மீது பொதுமக்கள் கோபமாக இருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2017-11-02 09:48 IST   |   Update On 2017-11-02 09:48:00 IST
அ.தி.மு.க. ஆட்சியை அகற்றாத தி.மு.க. மீது பொதுமக்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் பொம்மாடிமலை காந்திநாதன் திடலில் நடைபெற்றது.

விழாவிற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் வரவேற்றார்.

இதில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், நடிகர் தவசி தேவன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் முகமது அலிஜின்னா, வெள்ளனூர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் நல்லதம்பி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-


அமைச்சர் விஜயபாஸ்கர் குவாரி ஊழலில் ரூ.350 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி மோசடி, குட்கா ஊழலில் ரூ.40 கோடி லஞ்சம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளருக்கு பல கோடி ரூபாய் பட்டுவாடா செய்த பட்டியல் என வருமான வரித்துறை கண்டுபிடித்து குற்றம் சாட்டி உள்ளது.

இதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தேசத்துரோக வழக்கு போடவேண்டும். அவர்தான் சிறைக்கு செல்ல வேண்டும். ஆனால் மத்திய அரசு கதிராமங்கலம் பிரச்சனைக்கு போராடிய பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு லஞ்சம் பெறப்பட்டதாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மீதும், அவரது நேர்முக உதவியாளர் மீதும் அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி ஓய்வுபெறும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஓய்வு பெறுவதை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சத்துணவு அமைப்பாளர் நியமன ஊழலில் யாரும் தப்பிக்க முடியாது.

ஜெயலலிதா மறைவுக்கு தி.மு.க. இரங்கல் தெரிவித்தது. நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். அவர் நடித்த படத்தை நான் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். அவரை அரசியலில் வளர்த்தது தி.மு.க.தான். அவர் நோய்வாய்ப்பட்டபோது கருணாநிதி, நாற்பது ஆண்டு கால நண்பரே நலமுடன் வா என வாழ்த்தினார்.

தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து எதிர்க்கட்சியை விமர்சிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியின் பணிகளை நாங்கள் மிகவும் சரியாக செய்து வருகிறோம். என்னை சந்திக்கும் வி.ஐ.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த (அ.தி.மு.க.) ஆட்சியை எப்போது அகற்றுவீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் கோபம் எல்லாம் அ.தி.மு.க. மீது அல்ல, இந்த ஆட்சியை இன்னமும் விட்டு வைத்திருக்கிறார்களே என்று தி.மு.க. மீதுதான் கோபமாக இருக்கிறார்கள்.

தலைவர் கலைஞரை பொறுத்தவரை கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கக்கூடாது என்று வலியுறுத்துவார். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். இந்த ஆட்சியை காப்பாற்ற மோடி முயற்சிக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்பதே இதற்கு காரணம். ஆனாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வால் கையைகூட ஊன்ற முடியாது.


வருகிற 6-ந்தேதி சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரே‌ஷன் கடைகள் முன் போராட்டமும், 8-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைக்காக மத்திய அரசை கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 7-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நான் சொல்வது பொய் என்றால், அவருக்கு தைரியமிருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்.

இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த டாக்டரிடம் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விபரங்களை கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுக்கோட்டை நகர பகுதியில் செயல்பட்டு வந்த மருத்துவமனையை மூடிவிட்டு இங்குள்ள மருத்துவர்களை கொண்டே மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதால் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மருத்துவமனைகளை அதிகம் திறக்க வேண்டிய அரசு, செயல்பட்டுவரும் மருத்துவமனைகளுக்கு மூடுவிழா நடத்தி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் வழக்கம் போல் இந்த அரசு மருத்துவமனை செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News