செய்திகள்

1.88 கோடி குடும்பத்துக்கு ‘ஸ்மார்ட்’ குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது: ஆளுநர்

Published On 2018-01-08 07:15 GMT   |   Update On 2018-01-08 07:15 GMT
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடியே 88 லட்சம் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது என்று கவர்னர் கூறினார். #TNAssembly #Governoraddress #smartcard

சென்னை:

கவர்னர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அத்தியாவசியப் பொருட்களின் சந்தை விலையில் ஏற்படும் விலை ஏற்றத்திலிருந்து ஏழை மக்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது.

கடந்த ஆண்டைப் போன்றே, இவ்வாண்டும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இதரப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து குடும்ப அட்டைகளுடனும் ஆதார் எண்ணை இணைக்கும் இந்த அரசின் முயற்சி அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக வரவேற்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒரு கோடியே 94 லட்சம் குடும்பங்களில், இதுவரை ஒரு கோடியே 88 லட்சம் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

அனல்மின் உற்பத்தித் திறனை மேலும் 13 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உயர்த்துவதற்கு மாநில அரசு அயராது பாடுபடும்.

6,200 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்யும் அனல்மின் அலகுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதுதவிர 9.300 மெகாவாட் கூடுதல் மின்உற்பத்தி செய்யக்கூடிய அலகுகளை நிர்மாணிப்பதற்கான பணிகளும் பரிசீலனையில் உள்ளன.

நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவு திறனில், 18 சதவீதத்தை தமிழ்நாடு பெற்றிருப்பதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly  #Governoraddress  #smartcard #tamilnews

Tags:    

Similar News