உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 188 மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-07-24 15:40 IST   |   Update On 2022-07-24 15:40:00 IST
  • செஸ் ஒலிம்பியாட்டில் 188 நாடுகள் பங்கேற்பதை குறிக்கும் வகையில் நடைபெற்றது
  • மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

ஊட்டி:

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதில் 188 நாடுகள் கலந்து கொள்வது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.31 லட்சம் செலவில் ஊட்டி அருகே உள்ள மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்து வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் கூறியதாவது:-

இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சா்வதேச அளவில் 188 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, தோட்டக்கலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

அதேபோல நீலகிரி மாவட்ட கலெக்டர் வருகிற 25-ந் தேதி கோவை மாவட்டத்துக்கு சென்று சா்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு டாா்ச் பெற்று வரவுள்ளாா். அதனை தொடா்ந்து, 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் டாா்ச் ரிலே விழிப்புணா்வு பேரணி நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி 188 நாடுகள் பங்கேற்பதை முன்னிட்டு மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டி விளையாடுவதற்கு செஸ் போா்டு மற்றும் காய்களை வழங்கினாா்.இதில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகுமாா், சிவகுமாா், நஞ்சநாடு ஊராட்சித் தலைவா் சசிகலா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News