செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2017-10-03 16:03 IST   |   Update On 2017-10-03 16:03:00 IST
கர்நாடகாவில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிபடியாக சரிந்து இன்று 12ஆயிரத்து 954 கனஅடியாக குறைந்தது.
சேலம்:

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழையாக பெய்தது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கபினி அணை நிரம்பியது. கிருஷ்ணராஜசாகர் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.

இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்தால் படிப்படியாக அதிகரித்து நேற்று 94.84 அடியாக உயர்ந்தது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து நேற்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 15ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்மூலம் 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது.

இதற்கிடையே கர்நாடகாவில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 13ஆயிரத்து 928 கனஅடியானது.

இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 12ஆயிரத்து 954 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 15ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நேற்று 94.84 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று சற்று உயர்ந்து 95.09 அடியாக உள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இனிவரும் நாட்களில் கூடுதல் மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை கல்லணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5-ந்தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News