செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை: 5 தாலுகாக்களில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2017-12-01 05:23 GMT   |   Update On 2017-12-01 05:26 GMT
சிவகங்கை மாவட்டத்தில் கனமழையால் 5 தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

சிவகங்கை:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார் கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை சாரல் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.

கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழையால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விடிய, விடிய மழை நீடித்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது.

தொடர்மழை காரணமாக சிவகங்கை, காளையார்கோவில், இளையாங்குடி, மானாமதுரை, திருப்புவனம் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் லதா அறிவித்துள்ளார்.

ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கன மழை கொட்டியது. நேற்று சற்று ஓய்வெடுத்தது.

இந்த நிலையில் நேற்று மாலை பலத்த சூறாவளி வீசியது. அந்த சமயத்தில் பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் கடல் உள் வாங்கியது.

சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையை மணல் மூடியது. இன்று அதிகாலை 4 மணிக்கு பெய்யத் தொடங்கிய சாரல் மழை 6 மணி வரை நீடித்தது. தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது.

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

Similar News